Published : 17 Aug 2021 03:16 AM
Last Updated : 17 Aug 2021 03:16 AM

இறந்தவர் சடலம் கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் உறவினர்கள் மறியல் :

தனியார் நிலம் வழியாக இறந்தவரின் உடல் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து பழையபாளையம் - அலங்காநத்தம் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

தனியார் நிலம் வழியாக இறந்தவரின் உடல் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்து பழையபாளையம் - அலங்காநத்தம் சாலையில் கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே பழையபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பன் (80). இவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதையடுத்து நேற்று காலை அவரது உடல் பழையபாளையம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மயானத்திற்குச் செல்லும் வழியில் தனியார் விவசாய நிலம் உள்ளது.

அந்த நிலத்தின் வழியாக செல்ல முடியாதபடி கான்கிரீட் திட்டு கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்றக்கோரி இறந்தவர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைக்கண்டித்து இறந்தவரின் உறவினர்கள் பழையபாளையம் - அலங்காநத்தம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட பாதை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கான்கிரீட் திட்டை இடிக்க இயலாது என காவல் துறையினர் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட மக்களை சமரசம் செய்தனர்.

இதையேற்காத மக்கள் அதேபாதை வழியாக பிரேதத்தைக் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x