Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று ஆட்சியர்கள் மரியாதை :

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், டிஆர்ஓ துர்காமூர்த்தி. அடுத்தபடம்: ஈரோட்டில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர் திருமாத்தாள் இல்லத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்/ஈரோடு

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர்கள் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கவுரவித்தனர்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 173 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் கரோனா தொற்று தடுப்புப் பணியில் நேரடியாக ஈடுபட்ட 212 முன்களப் பணியாளர்களின் பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

தொடர்ந்து எர்ணாபுரம் குட்டித்தெருவில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி அருக்காணிஅம்மாள் கருப்பையாவுக்கு ஆட்சியர் ஸ்ரேயா சிங் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதுபோல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு வருவாய் துறையினர் நேரில் சென்று மரியாதை செய்தனர். நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 256 பேருக்கு, ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று ஆட்சியர் கவுரவித்தார். கரோனா பரவல் காரணமாக சுதந்திர தின விழாவில், பார்வையாளர்கள் பங்கேற்கவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

விழாவில், எஸ்பி ஏ.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேசன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் என்.சிவகுமார், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்பின்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களிலும், காங்கிரஸ், பாஜக, தமாகா உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் சார்பில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x