Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

கரோனா தொற்று பரவல் காலத்தில் - சேலம் ரயில்வே கோட்ட பார்சல் வருவாய் 14.7% அதிகரிப்பு : சுதந்திர தின விழாவில் தகவல்

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் னிவாஸ் ஏற்றுக்கொண்டார்.

சேலம்

சேலம் ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் னிவாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் சிவசங்கரன் முன்னிலையில், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். பின்னர் அவர் பேசியதாவது:

கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பான பணிகளில் ஈடுபட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 91 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தொற்று காலத்திலும் 2.83 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பார்சல் போக்குவரத்து வருவாயில் 14.7 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது .

சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு பரிசோதனைக்கு தொடுதலற்ற நடவடிக்கைக்காக ஐஆர் தெர்மல் ஸ்கேனர், கேமரா, கணினி உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன. சேலம் ரயில்வே கோட்டத்தில், 96 சதவீதம் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை ஜங்ஷன் ரயில் நிலையம், தெற்கு ரயில்வேயில், பசுமை நடவடிக்கைக்கான விருதினைப் பெற்ற முதல் ரயில் நிலையமாகவும், இந்திய ரயில்வே அளவில் 6-வது இடத்தையும் பெற்றதாக பெருமை சேர்த்துள்ளது.

ஆத்தூர், சின்னசேலம், விராக்கியம், லாலாபேட்டை, சித்தலவாய், பெட்டைவாய்த்தலை ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில்வே மருத்துவமனை மேற்கூரையில், 20 கிலோ வாட் சூரியசக்தி மின்சார தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 20.48 சதவீதம் எரிசக்தி சிக்கனம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின் துல்லிய செயல்பாடு 96.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், முதுநிலை கோட்ட பொறியாளர் கண்ணன், கோட்ட முதுநிலை மேலாளர் (மெட்டீரியல்) பாஸ்கர், கோட்ட முதுநிலை நிதி மேலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x