Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் மூன்றாம்பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அடையாள அட்டை, கரோனா நிதியுதவி வழங்குவதுடன் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அடையாள அட்டை வைத்துள்ள 33 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இரண்டாம் தவணை நிதியுதவியும், 41 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய அடையாள அட்டையை யுடன் முதல் தவணை நிதியுதவி யும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘கரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுவதுடன் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைககளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தவறாமல் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி குறித்த தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடம் ஒதுக்கி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவை கட்டி முடிக்கப்படும். ரேஷன் அட்டை மற்றும் மகளிர் குழு கடனுதவிகள் மூலம் தொழில் தொடங்க உதவ வேண்டும் என்று கோரியுள்ளீர்கள். அனைவரும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT