Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மத்திய மண்டலத்தில் திமுகவினர் நேற்று பல்வேறு இடங்களில் அவரது சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு திமுகவின் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜன், மாநில இலக்கிய அணி நிர்வாகி வண்ணை அரங்கநாதன் உள் ளிட்டோர், கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் பாலக்கரையிலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் படத்துக்கு எம்எல்ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம், அகரம்சீகூர் ஆகிய இடங்களில் கருணாநிதியின் படத்துக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ கு.சின்னப்பா, நகரச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெயங்கொண்டத்தில் கருணாநிதியின் படத்துக்கு எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
கரூர் கலைஞர் அறிவாலயம், பேருந்து நிலைய ரவுண்டானா ஆகிய இடங்களில் கருணாநிதியின் படத்துக்கு மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாம சுந்தரி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணி கே.மணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்ட திமுகவினரும், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனும் தனித்தனியாக மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவாரூர் சட்டப்பேரவை அலுவலகத்தில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள், அன்னதானம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், திமுக நகரச் செயலாளர் வாரை.பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் ரஜினிசின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் ஒன்றிய அலுவலகத்தில் புலிவலம் தேவா தலைமையில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT