Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM
திருப்பத்தூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் கரோனா தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையே, வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச் சாவடியில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்புப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கரோனா தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பத்தூர் நகராட்சி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு 4-ம் நாள் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நேற்று நடைபெற்றன.
கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், 3-வது அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, தடுப்புப் பணிகள் துரிதப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்பாடு குறித்து வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
விதிமுறைகளை மீறுவோர் களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கின.
திருப்பத்தூர் நகராட்சி ஆணை யாளர் ஏகராஜ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர்கள் விவேக், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வாணியம் பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி ஆகியோர் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மேற்பார்வையில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்கு நர் செந்தில்,ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு கரோனா தடுப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பணிகளை சுகாதாரத்துறை மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு, வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணபூரணி டிரஸ்ட், செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஆற்காடு பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். அப்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டகாயம் கடைப் பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக் கூடாது, விதி மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்தார்.இதைத்தொடர்ந்து, கலவை, வாலாஜா, சோளிங்கர், அரக் கோணம், நெமிலி ஆகிய வட்டங் களில் கபசுர குடிநீர் மற்றும் சித்தா வைட்டமின் மாத்திரைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கின. நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, ஆற்காடு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT