Published : 04 Aug 2021 03:21 AM
Last Updated : 04 Aug 2021 03:21 AM
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பவானி கூடுதுறை மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவ்விடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரிக்கரை உள்ளிட்ட ஆற்றின் கரையோரங்களில் ஆடிப்பெருக்கு புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதேபோல், பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், சென்னிமலை முருகன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 19 முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபட நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இப்பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காவிரி மற்றும் பவானி ஆறுகளில் புனித நீராட வந்தவர்களை போலீஸார் திருப்பி அனுப்பினர். ஆடிப்பெருக்கின்போது, ஏராளமான புதுமண தம்பதிகள் குவியும் பவானி கூடுதுறை நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது. பண்ணாரி கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வளாகத்தில் விளக்கேற்றியும், வெளியில் நின்றும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சோழிஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் காவிரிக்கரையில் புனித நீராடவும் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், பூட்டப்பட்ட கோயில்களின் முன்பு ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கோயில்களில் பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பெருக்கினையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பவானிசாகர் அணையைப் பார்வையிடவும், கொடிவேரியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
வெறிச்சோடிய காவிரி, கொல்லிமலை
இதுபோல், நாமக்கல் மாவட்டத்திலும் காவிரி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.நாமக்கல் மாவட்டம் குமார பாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர், மோகனூர் பகுதிகளில் ஆடிப்பெருக்கின்போது மக்கள் காவிரி ஆற்றில் குளித்து வழிபாடு நடத்துவது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிகளில் மக்கள் கூட்டமன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுபோல் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கும் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையை நம்பியிருக்கும் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கப்பட்ட அமைப்பினர் மட்டும் கொல்லிமலை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT