Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM

கரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை - ஆடிப் பெருக்கு நாளில் நீர்நிலைகளில் மக்கள் கூட தடை :

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடிப் பெருக்கு அன்று வழிபாடு செய்ய ரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுக்கு பக்தர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து நேற்று மூடப்பட்ட அம்மா மண்டபம்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி/ தஞ்சாவூர்

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மண்டல மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மேலும், ஆடிப் பெருக்கையொட்டி நீர்நிலைகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் ரங்கம், சமயபுரம், திருவானைக் காவல், மலைக்கோட்டை, வயலூர், உறையூர் வெக்காளியம்மன் ஆகிய கோயில்களில் அர்ச்சகர்கள் பூஜை செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஆடிப் பெருக்கை யொட்டி காவிரிக் கரையில் கூடுவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆக.2, 3-ம் தேதிகளில்(இன்றும், நாளையும்) பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இன்று(ஆக.2) முதல் ஆக.8 வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் ப. வெங்கடபிரியா அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி, கரூர் மாரியம்மன், வெண்ணெய் மலை, பாலமலை, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், குளித்தலை கடம்பனேஸ்வரர், மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன், மதுக்கரை செல்லாண்டி யம்மன் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோயில்களிலும் இன்றும், நாளையும்(ஆக.2, 3) பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், திருக்கடம்பந்துறையில் பொதுமக் கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை என கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு படித்துறை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் காவிரி படித்துறைகள், கல்லணை, கும்பகோணம் அரசலாறு படித்துறை, மகாமககுளம், பாபநாசம் குடமுருட்டி ஆறு, திருவிடை மருதூர் வீரசோழன் ஆறு, அணைக்கரை, கல்லணைக் கால்வாய் ஆறு மற்றும் அதைச் சார்ந்த கிளை ஆறுகளில் உள்ள நீர்நிலை வழிபாட்டுத் தலங்களில் நாளை(ஆக.3) பொதுமக்கள் கூடு வதற்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. மேலும், கல்லணை சுற்றுலாத் தலத்திலும் ஆக.1 முதல் 3-ம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

இதேபோல, ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் கும்பேஸ் வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், சுவாமிமலை முருகன் கோயில், திருநாகேஸ்வரம் நாகநா தசுவாமி கோயில், ஒப்பிலியப்பன் கோயில்களில் ஆக.1 முதல் ஆக.3 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில், ஆகம விதிகளின்படி பூஜை, அலங்காரம் ஆகியவை கோயில் பணியாளர்களைக் கொண்டு நடை பெறும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித் துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில், திருக்குவளை வட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், நாகை வட்டம் சிக்கல் நவநீதேசுவரர் கோயில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் சுவாமி கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று முதல் ஆக.4-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரைகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகள், காவிரி கிளை ஆறுகளுக்கு ஏராளமான பொது மக்கள் வந்து, தங்களின் மூதாதை யர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதனால், கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்படும் என்பதால், ஆக.8, 9-ம் தேதிகளில் பொதுமக்கள் கடற் கரைகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சி யர்கள் அருண் தம்புராஜ் (நாகை), ரா.லலிதா(மயிலாடுதுறை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இன்றும், நாளையும்(ஆக.2, 3) பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி மறுக்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x