Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைப்பகுதியில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மலைவாழ் மக்களுக்கு அளிக் கப்பட்டு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க மாவட்ட சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். நகர்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கும் கரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சுகாதாரத்துறையினருக்கு உத்தர விட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 குக்கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக, புதூர்நாடு அரசு ஆரம்ப சுகாதார மைய தலைமை மருத்துவர் ரமேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் புதூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மொழலை, புலியூர் மற்றும் சேம்பறை ஆகிய மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று அங்கு விவசாயப்பணியில் ஈடுபட்டு வந்த மலைவாழ் மக்களிடம் கரோனாவால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், கரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர், மொழலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு சுகாதாரத் துறையினர் கரோனா தடுப்பூசியை செலுத்தினர்.
இதேபோல, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும் நேரில் சென்று கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி மலை வாழ் மக்களுக்கு கரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT