Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM
இ-சேவை மையங்களை மேம்படுத்த ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி,ஆதார் சேவை மையம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை பார்வையிட்டார்.
மேலும், சேலத்தில் இரண்டாம் கட்டமாக தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு, அம்மாப்பேட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்படும் இ-சேவை மைய பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ஜாகீர் அம்மாப்பாளையம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் மென்பொருள் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் நிவாரண நிதியாக ஒன்றரை ஆண்டில் ரூ.400 கோடி கிடைத்துள்ளது. ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை காரணமாக திமுக ஆட்சியில் கடந்த 2 மாதத்தில் ரூ.412 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.
ஆண்டு தோறும் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 15 லட்சம் பேர் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிட உள்கட்டமைப்பை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இ-சேவை மையத்தை கூடுதலாக மேம்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முன்பு இ-சேவை மையத்தை 7 லட்சம் பேர் வரை மட்டுமே தொடர்பு கொண்ட நிலையில், ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் வரை தொடர்புகொள்ளும் வகையில் தமிழக அரசின் சேவை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 12 ,534 கிராம ஊராட்சிகளுக்கு முறையாக பைபர் நெட் மூலம் இணையதள வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும் வகையில் பைபர் நெட் அமைக்கும் பாரத் நெட் திட்டம் ரூ.1,800 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கப்படவுள்ளது
அதிமுக ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் ரூ.400 கோடி கடன் ஏற்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 76 லட்சத்திலிருந்து 22 லட்சமாக குறைந்துள்ளது. கடனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் கோவை ஓசூர் உள்ளிட்ட 7 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சேலத்தில் இரண்டாம் கட்டமாக தகவல் தொழில்நுட்பப் பூங்கா, அம்மாப்பேட்டை பகுதியில் செயல்படாமல் உள்ள கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் தொடங்க ஆய்வு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல், மேலாண் இயக்குநர் அஜய் யாதவ், ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT