Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM
சிப்காட் தொழிற்சாலைகளில், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களைப் பணியில் அமர்த்தக்கூடாது என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள், மேலாளர்கள், வெளிமாநிலத்தவர்களை அழைத்து வரும் முகவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிப்காட் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிப்காட் தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். சிப்காட் டெக்ஸ்டைல் பிராசசிங் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ் பேசியதாவது
சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் பொழுது, அவர்களது ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் அசல் தானா என ஆராய்ந்து பணியில் அமர்த்த வேண்டும். வடமாநிலத்தவர் எனக் கூறி, வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களை எக்காரணம் கொண்டும் தவறுதலாக பணியில் அமர்த்தி விடக் கூடாது. அவ்வாறு வங்கதேசத்தை சேர்ந்த நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக இருப்பது தெரிந்தால், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாலர்களை வேலைக்கு அழைத்து வரும் முகவர்கள், தாங்கள் அழைத்து வருபவரின் முழு விவரத்தையும் தெரிந்திருக்க வேண்டும். தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT