Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 590-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 34 பேர் :

கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தங்கள் பிளஸ் 2 மதிப்பெண்களை பார்வையிட்ட மாணவிகள். படம்: ஜெ.மனோகரன்

கோவை/திருப்பூர்: கோவையில் பிளஸ் 2 தேர்வில் 34 மாணவர்கள் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்த ஏப்ரலில் நடைபெறவேண்டிய பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிறப்பு வழிகாட்டு குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவின் அறிக்கைபடி, மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதுதொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, "கோவையில் 15,840 மாணவர்கள், 19,005 மாணவிகள் என மொத்தம் 34,845 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 34 பேர் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 476 பேர் 575 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 2,625 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்” என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் 67 அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 836 பேர், 7 நகராட்சி பள்ளிகளில் 2 ஆயிரத்து 920 பேர், 18 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 ஆயிரத்து 354 பேர், 10 சுயநிதி பள்ளிகளில் 973 பேர், 112 மெட்ரிக் பள்ளிகளில் 10 ஆயிரத்து 52 பேர் என, மொத்தம் 214 பள்ளிகளில் 26 ஆயிரத்து 135 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x