Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

ஈரோடு மாவட்டத்தில் 3 நாளாக மழை - திம்பம் - தலமலை சாலையில் மண் சரிவு : பவானிசாகர் அணை நீர் மட்டம் 96 அடியானது

ஈரோடு

தொடர்மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது. திம்பம் - தலமலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஈரோடு, சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், கொடிவேரி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. தொடர் மழையால் வனப்பகுதிகள் பசுமையாகவும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடனும் காணப்படுகின்றன.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில், ராமரணை அருகே நேற்று முன்தினம் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் சொல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ): பவானிசாகர் - 11, தாளவாடி - 10, சத்தியமங்கலம் - 6, மொடக்குறிச்சி - 5, கொடிவேரி - 5.

பவானிசாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 4697 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி மற்றும் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x