Published : 19 Jul 2021 03:14 AM
Last Updated : 19 Jul 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செய்துங்கநல்லூர், வைகு ண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் திருச்செந்தூர் வட்டாரங்களில் கார் பருவ நெல் சாகுபடி சுமார் 3,800 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் மற்றும் சிலந்தி பேன் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இலைக் கருகல் நோயானது பாக்டீரியா என்ற நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய் நெற்பயிரில் தூர் கட்டும் பருவம் முதல் கதிர் பிடிக்கும் பருவம் வரை அதிகம் காணப்படுகிறது.
இந்நோய் தாக்கிய இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, இலை நுணி மற்றும் விளிம்புகள் காய்ந்து, கருகியது போன்று தோன்றும்.
நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும்.
சிலந்தி பேன் தாக்கிய இலைகள் அழுக்கான பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். கண்ணுக்கு தெரியாத சிலந்தி பேன்கள் இலையின் அடிபாகத்தில் இருந்து சாறை உறிஞ்சுவதால், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருக ஆரம்பித்துவிடும். காற்று அதிக ஈரப்பதத்துடன் வெப்பமாக வீசும்போது இதன் தாக்குதல் அதிகமாக காணப்படும்.
இந்நோய்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நோயியல் துறை பேராசிரியர் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி பாக்டீரியா இலைக் கருகல் நோயினை கட்டுப்படுத்த காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற அளவிலும், சிலந்தி பேனை கட்டுப்படுத்த டைகோபால் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அல்லது நனையும் கந்தக தூள் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து பயிர் முழுவதும் நன்கு நனையும்படி கைதெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT