Published : 17 Jul 2021 03:16 AM
Last Updated : 17 Jul 2021 03:16 AM
தமிழ்நாடு அறக்கட்டளை (USA) சார்பில் கரோனா நோயாளிகளின் தேவைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் குமரவேல் தலைமை வகித்தார். திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் வழங்கினார்.
அப்போது ஆட்சியர் பேசும் போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவை தடுக்க மருத்துவர்கள் திறமையாக செயல்பட்டனர்.
இந்த மருத்துவமனைக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அதை அரசு செய்து தர தயாராக இருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
அரசு மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருவது வரவேற்கத்தக்கது. அதன் படி, தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற வசதிகளை பயன்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், திமுக நகரச்செயலாளர் எஸ். ராஜேந் திரன், ஒன்றியச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT