Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரசின் உதவிகளைப்பெற பணிக்குழு கட்டுப்பாட்டு அறை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் உதவிகளைப் பெற பணிக்குழு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றுக்கு பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, அரசு இல்லங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு நிறைவு செய்யும் வரை கல்வி மற்றும் விடுதி செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்கிறது.

மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்கள், பாதுகாவலர்களின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை சேலம் மாவட்டத்தில் முழுமையாக நிறைவேற்ற மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவி வேண்டுவோர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவர்களது கோரிக்கைகளை பதிவு செய்து கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் எண் 93857 45857 மற்றும் மின்னஞ்சல் முகவரி postcovid19helpteamslm@gmail.com ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்படும். தொடர்புடைய அலுவலர்கள் குறைகளை களைய துரித நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

கரோனா தொற்றால் கணவரை இழந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளை இழந்த முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளோர்களுக்கு மாதாந்திர உதவிகள், பாதுகாப்பான தங்குமிடம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களில் உரிய உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பாதிப்புக்குள்ளான குழந்தைகள் தொடர்பான விவரங்கள் ரகசியமான முறையில் பாதுகாக்கப்படும். பொதுவெளி, ஊடகங்கள் வழியாக இவ்விவரங்கள் வெளியிடப்படாது.

எனவே, கரோனா தொற்றால் பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெரியவர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பணிக்குழு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x