Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

புதிய ரேஷன் அட்டை பெற சிறப்பு முகாம் : ராதாபுரம், திசையன்விளை மக்கள் பயன்

ராதாபுரத்தில் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமை தமிழகம் முழுவதும் நடத்த அமைச்சர் அர. சக்கரபாணி உத்தரவிட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது மற்றும் ரேஷன் கார்டுகளில் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு ஏற்பாட்டில் நடை பெற்ற இந்த முகாமில் 2 தாலுகாக்களிலும் இருந்து 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், குடும்பத் தலைவரின் புகைப்படம் மாற்றம் ஆகியவைகளுக்காக தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு முகாமை நடத்த திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்காக அதிவேக இன்டர்நெட் இணைப்பு வசதியுடன் கூடிய 20 கணினிகள் முகாம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கான பதிவுகள் மற்றும் திருத்தங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.

புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை மற்றும் இருப்பிட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப் பட்டது. ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர், ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

பெயர் சேர்ப்பு

புதிதாக திருமணமானவர் களுக்கு திருமண பத்திரிக்கை அல்லது திருமணச்சான்று சமர்ப்பித்து பழைய குடும்ப அட்டையிலிருந்து பெயர்களை நீக்கம் செய்து, புதிய குடும்ப அட்டையில் சேர மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெயர்கள் சேர்க்கப்பட்டன. பல ஆண்டுகளாக குடும்ப அட்டை களில் குழந்தைகளின் பெயர்களை சேர்க்க முடியாதவர்களும் உடனடி யாக இந்த முகாமில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு அவர் களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முகாமில் பல திருநங்கைகளும் கலந்து கொண்டனர்.

முன்மாதிரியாக நடைபெற்ற இந்த முகாமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நடத்த உணவு வழங்கல் அதிகாரி கள் ஆவன செய்ய வேண்டும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளதாக சட்டப் பேரவை தலைவர் தெரிவித்தார். முகாமில் திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x