Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM
திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நீதிபதியை தலைவராகவும், பொதுபயன்பாட்டு சேவைகளில் போதிய அனுபவம் உடைய இருவரை உறுப்பினர்களாகவும் கொண்டு நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாற்று சமரச தீர்வு மையத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் அனைத்து வேலைநாட்களிலும் செயல்பட்டு வருகிறது. சாலை, விமானம், சரக்கு போக்குவரத்து, அஞ்சல், தந்தி, தொலைபேசி சேவை, குடிநீர் வழங்கல், மின்சாரத்துறை, துப்புரவு பணி, மருத்துவமனை, மருத்துவத்துறை, காப்பீட்டு சேவைகள், வீடு மற்றும் வீட்டுமனை ரியல் எஸ்டேட், கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் செல்லாமலேயே நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம்.
புகார்களை சாதாரண காகிதத்தில் கட்டணமின்றி மனுவாக தாக்கல் செய்யலாம். புகார்கள் சமரச முறையிலும், சமரசம் ஏற்படாவிட்டால் தகுதியின் அடிப்படையிலும் தீர்ப்பாகலாம். ரூ.1 கோடி மதிப்புடைய வழக்குகள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவு சிவில் நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு எதுவும் செய்ய இயலாது. இதில் கடுமையான நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் இல்லை. எளிய நடைமுறை என்பதால் ஏழை எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கிறது.
இந்த வாய்ப்பை திருநெல்வேலி மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை 0462-2572689, 6380806525 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT