Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM

பாளை.யில் குடிசை மாற்று வாரிய புதிய குடியிருப்பு அமைக்கக் கோரி மனு :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஆதித்தமிழர் பேரவையினர். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் டாக்டர் அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரிய புதிய குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அப்பேரவையின் மாவட்டச் செயலாளர் கு.கி. கலைகண்ணன் உள்ளிட்டோர் அளித்த மனு:

பாளையங்கோட்டை அம்பேத் கர் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்து மக்கள் குடியிருக்க முடியாத பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் அந்த குடியிருப்புகளை இடித்து அகற்றிவிட்டு புதிதாக குடியிருப்புகளை கட்ட வேண்டும். மேலும் திருநெல்வேலி மாநகர், புறநகர் பகுதிகளில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் குடியிருக்கும் அருந்ததியர் மக்களின் கோரிக்கையை ஏற்று குடிசை மாற்று வாரியத்தின்கீழ் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்று மதெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலாளர் எஸ். முஸ்தபா உள்ளிட்டோர் அளித்த மனு:

திருநெல்வேலி டவுனில் குற்றாலம் ரோடு மற்றும் மேலமவுண்ட் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பணிகளுக்காக சாலைகள் தோண்டி மூடப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் சீர்செய்யப்படாமல் இருக்கிறது.

கேரள மாநிலம் மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து விதமான சிறிய மற்றும் கனரக வாகனங்களும் இவ்வழித் தடத்தையே பயன்படுத்துகின்றனர். உயிர்காக்கும் அவசர ஊர்தி வாகனங்களும் இவ்வழியாக பயணிப்பதால் சரியான நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க முடியவில்லை.

எந்த தேவைக்காக சாலைகள் தோண்டப்பட்டதோ, அந்த பணிகள் நிறைவடைந்த நிலையிலும் சாலை சீர் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், புழுதி நிறைந்து காணப்படுகிறது. புழுதி கலந்த காற்றை சுவாசித்து வாழ்ந்து வரும் இப்பகுதி பொதுமக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்ந பிரச்சினை குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த பலனும் இல்லை. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி இச்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x