Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

கடலூரில் வேளாண் விளை பொருட்களை - சூரியசக்தி மூலம் உலர வைக்கும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி :

கடலூர் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களை சூரியசக்தி மூலம் உலர வைக்கும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

கடலூர் வேளாண்மை துணைஇயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கி பேசுகையில் வாய்ப்புள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கூடார உலர்த்திகளை மானியத்தில் அமைக்கலாம் என்று தெரிவித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், மிளகாய், முருங்கைக் கீரை, கருவேப்பிலை, கொப்பரைத்தேங்காய், வாழை, மாம்பழம், பூண்டு, மூலிகை செடிகள் மற்றும் காளான் ஆகியவற்றை விரைவாக காய வைத்து பொருட்களாக விற்பனை செய்யும்போது அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை மூலம் முன்னரே அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள சூரிய சக்தி உலர் கூடாரங்களை கடலூர் வட்டார விவசாயிகள் நேரில் பார்வையிட்டு தெளிவு பெற ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கடலூர் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு காணொலி காட்சி அமைப்பு முறை மூலம் பாலிகார்பனேட் தகடுகளால் ஆன பசுமைக்குடில் வகை சூரிய கூடார உலர்த்தியின் செயல்பாடுகளை விளக்கி கூறினார். இம்முறையில் வேளாண் விளைப்பொருட்களை உலர வைப்பதன் மூலம் அவற்றை காய வைப்பதற்கான கால அளவு குறையும். ஆள் கூலி மற்றும் அறுவடைக்கு பிந்தைய இழப்பும் பெருமளவு குறையும். சுகாதாரமான முறையில் இயற்கைத் தன்மை மாறாமல் காய வைப்பதால் தரம் உயர்ந்து பூசனம் படிவது தடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த பயிற்சியில் கடலூர் வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் பங்கு பெற்று தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் ஜெய, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் அழகுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x