Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM
காய்கறி மார்க்கெட்டில் சுங்கக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதைக் கண்டித்து ஈரோடு ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் சுங்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மார்க்கெட் வியாபாரிகள் தொடர் புகார் எழுப்பி வந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் புகார் செய்தனர். எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சூழலில் நேற்று கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீரப்பன்சத்திரம் போலீஸார் மற்றும் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடைக்கு தினசரி ரூ.16 வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் ரூ.50 வசூலிப்பதாகவும், காய்கறி மூட்டை ஒன்றுக்கு ரூ.7 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.30 வசூலிப்பதாகவும் வியாபாரிகள் கூறினர். மேலும், வாகன அனுமதி கட்டணமும் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுங்கக்கட்டணம் எவ்வளவு என்பது குறித்து மார்க்கெட் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மூலம் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து காய்கறி வியாபாரிகள் ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT