Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM

பாப்பாக்குடி ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 4 கிராம மக்கள் மனு

பாப்பாக்குடி ஊராட்சியை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 4 கிராம மக்கள். (அடுத்த படம்) கரோனா உதவித் தொகை வழங்கக்கோரிய கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 கிராம மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சேரன்மகாதேவி தாலுகா பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழபாப்பாக்குடி, ஓடைக்கரை, துலுக்கப்பட்டி, குமாரசாமியாபுரம், இலந்தைகுளம் கிராம மக்கள் அளித்த மனு:

பாப்பாக்குடி மிகப்பெரிய முதல்நிலை ஊராட்சியாகும். இதில்13 கிராமங்கள் உள்ளன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசிக்கிறார்கள். இதனால் ஊராட்சி அலுவலகத்துக்கு வருவதற்கு பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

பெரிய ஊராட்சியான இதற்கு மற்ற ஊராட்சிகளைப் போல குறைந்த அளவே அரசால் நிதி ஒதுக்கப்படுவதால் அனைத்து கிராமங்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. பல கிராமங்களில் சாலை,குடிநீர், மின்விளக்குகள் போன்றஅடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளன. எனவே, பாப்பாக்குடி ஊராட்சியை 2-ஆக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வரம், தவில் இசைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் அளித்த மனு:

கரோனா ஊரடங்கு காலங்களில்நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைத்து நகர மற்றும் கிராம கோயில் திருவிழாக்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி வழங்க வேண்டும். ஊரடங்கு காலம் முடியும் வரை குடும்ப பராமரிப்பு நிதியாக மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும் . குழந்தைகளின் கல்வி மற்றும் மேற்படிப்பு செலவுக்காக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அரசின் அனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் போதும்உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் .

கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைஞர்களுக்காக வழங்கும் அடையாள அட்டை, நாட்டுப்புற நல வாரியம், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முறைகளை எளிமையாக்கி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் பேரவையினர் அளித்த மனு:

அனைத்து பூஜாரிகளுக்கும் கரோனா உதவித் தொகை வழங்க வேண்டும். கடந்த 4 மாதமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். பூஜாரிகள் நலவாரியத்தை செம்மைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். கோயில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார், கிராம கோயில் பூஜாரிகளை இணைக்க வேண்டும். அனைத்து கிராம கோயில் பூஜாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஐஐடி மற்றும் உயர்கல்வி நிலையங்களில் ஊதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை கொடுமையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஆர். மதுபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x