Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று (5-ம் தேதி) முதல் அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
கரோனா 2-ம் அலை பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, கோயில் களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்யவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் அறிவுரைகள் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் 5-ம் தேதிமுதல் அரசால் வெளியிடப் பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி, சமூக இடை வெளியுடனும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடனும் பக்தர்கள் வழக்கமான சுவாமி தரிசனத்துக்கு அனுமதியளிக்கப் படுகிறது.
அதேநேரம் மாதாந்திர பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளில் பக்தர்களுக்கு தற்போதைய நிலையில் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT