Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM
கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் சித்த மருந்து பெட்டகங்கள் வழங்கும் பணியினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராசிபுரத்தில் தலா 50 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் இதுவரை 202 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 8 கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிகிச்சை பெற்று வரும் 175 நோயாளிகளின் உடல்நலனை மேம்படுத்தும் வகையில் சித்த மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, ரூ.320 மதிப்பிலான சித்த மருந்து தொகுப்புகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கோ.செல்வமூர்த்தியிடம் வழங்கினார். அப்போது நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்யும் மூலிகை கலவையான கிராம்பு குடிநீர் வழங்க சித்த மருத்துவ அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மைய கண்காணிப்பாளர்கள் தமிழ்செல்வன்,வெங்கடபிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT