Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM
‘பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே டிஜிட்டல் தொழில் நுட்பக் கல்வி பயில தேவையான ஊக்கமும், முக்கியத்துவமும் வழங்கப்படும்,’ என பெரியார் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ஆர்.ஜெகன்நாதன்(66) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் கூறியது:
பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது குறித்தும், உள்கட்டமைப்பு வசதிகள், சவால்கள் குறித்தும் ஆய்வு செய்து, அதற்கு தகுந்தாற் போல நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியர்களின் கல்வி நலனை பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக எனது பணி இருக்கும்.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி 60 சதவீதமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆளுமையும், ஆதிக்கமும் காணப்படும் என்பதால், மாணவ, மாணவிகள் டிஜிட்டல் தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு ஊக்கமும், முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்று காலத்தில் வீடுகளில் இருந்தபடியே பணி பார்ப்பதும், குழந்தைகள் கல்வி பயில்வதும் என டிஜிட்டல் சார்ந்த வாழ்வியல் முறைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், டிஜிட்டல் தொழில்நுட் பத்தை சார்ந்தே உலக இயக்கம் இருப்பதால், இப்படிப்பில் மாணவ, மாணவிகளை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்குவதன் மூலம் வருங்காலத்தில் தொழில் வாய்ப்பு பெற்று, பொருளாதார முன்னேற்றத்தை அடைய வழி ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT