Published : 03 Jul 2021 03:15 AM
Last Updated : 03 Jul 2021 03:15 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்ட அரசு தலைமை மருத்துவர் திலீபனுக்கு தமிழக அரசு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பேரிடர் காலத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றி கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழுமையாக தங்களை அர்ப்பணித்த அரசு மருத்துவர்களை தேர்வு செய்து, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ‘மருத்துவர் தினம்’ சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை பரிசாக வழங்கி கவுரவித்தார்.
இதில், திருப்பத்தூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி, தற்போது நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர்.திலீபன் திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறந்த மருத்துவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிசு பெற்றுள்ளார்.
கடந்த மார்ச் 2-வது வாரம் தொடங்கி, ஜூன் 2-ம் வாரம் வரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான உயர் ரக மருத்துவ சிகிச்சை, தடையில்லா ஆக்சிஜன் விநியோகம், நோயாளிகள் விரைவாக குணமடைந்து வீடு திரும்புதல் உள்ளிட்ட மருத்துவ சேவைகளை மருத்துவர் திலீபன் சிறப்பாக செய்தமைக்காக இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஊரக நலப்பணிகள் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வரிடம் இருந்து சிறந்த மருத்துவர் என்ற பரிசினை பெற்ற மருத்துவர். திலீபனுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் யாஸ்மீன், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் உதவி இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் சுமதி ஆகியோர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT