Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த - கண்காணிப்பு அலுவலர்கள் 7 பேர் நியமனம் : சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

சேலம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தீவிரப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர கண்காணிப்பு அலுவலர்கள் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.234.89 கோடி மதிப்பிலான 40 பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், ரூ.730.89 கோடி மதிப்பிலான 41 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மழை காலத்துக்கு முன்னர் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எருமாபாளையம் குப்பை கிடங்கை, பசுமை பூங்காவாக மேம்படுத்துதல், கோட்டை சின்னசாமி தெருவில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், சேதமடைந்த சிறுபாலங்களை மறுசீரமைக்கும் பணி, வஉசி மார்க்கெட் மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க மாநகர நல அலுவலர் பார்த்திபன், சேதமடைந்த சாலைகளை சீர்மிகு சாலைகளாக மேம்படுத்தும் பணிகளுக்கு செயற்பொறியாளர் லலிதா, திருமணிமுத்தாறு கரைப்பகுதி மேம்பாட்டு பணி, குமரகிரி, பள்ளப்பட்டி ஏரிகளை மேம்படுத்தி அழகுப்படுத்தும் பணிகளுக்கு செயற்பொறியாளர் (திட்டம் ) பழனிசாமி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எருமாபாளையம் பகுதியில் சூரிய சக்தி மின்னாக்கி பொருத்தும் பணிகள், நிலுவையிலுள்ள பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள், தொங்கும் பூங்கா பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளுக்கு அஸ்தம்பட்டி உதவி ஆணையர் சரவணன் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழைய பேருந்து நிலையத்தை மறுசீரமைக்கும் பணி, போஸ் மைதானம் மேம்பாடு, ஆனந்தா பாலம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைத்தல், பெரியார் பேரங்காடி மேம்பாட்டு பணிகள், அலங்கார மின்கம்பங்கள் அமைத்து எல்இடி மின் உமிழ் விளக்குகள் பொருத்துதல், குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு அம்மாப்பேட்டை உதவி ஆணையர் சண்முக வடிவேல் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சீர்மிகு சாலைப் பணிகள், நிலுவையிலுள்ள பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மேம்படுத்தும் பணிகளுக்கு கொண்டலாம்பட்டி உதவி ஆணையர் ரமேஷ் பாபு, புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி, நேரு கலையரங்கம் மேம்பாட்டு பணிகளுக்கு சூரமங்கலம் உதவி ஆணையர் ராம்மோகன் ஆகியோரும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர்கள் தினமும் பணி நடைபெற்று வரும் பகுதிகளை பார்வையிட்டு பணி முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து, பணிகளை தீவிரமாக மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை மாநகராட்சி பொறியாளர் அசோகன் மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x