Published : 01 Jul 2021 03:17 AM
Last Updated : 01 Jul 2021 03:17 AM

பாளை. பேருந்து நிலைய கட்டுமான பணி 50% நிறைவு : ஆய்வுக்கு பின் ஆட்சியர் விஷ்ணு தகவல்

திருநெல்வேலி நயினார்குளம் கரைப்பகுதிகளை மேம்படுத்தி அழகிய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.950 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை நவீன முறையில் ரூ.13.08 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இங்கு வணிக வளாகம் பகுதி-1 ரூ.14.94 கோடி மதிப்பிலும், பகுதி-2 ரூ.11.73 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படுகின்றன. இதுதவிர பல்நோக்கு வாகன நிறுத்துமிடம் சுமார் 7,552 சதுர மீட்டர் அளவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பேருந்து நிலையத்தின் முன் சிறுவர்களுக்கான அறிவியல் பூங்கா ரூ.4.94 கோடி மதிப்பிலும், அதன் அருகில் புதிய முயற்சியாக தொழில்நுட்ப பூங்கா ரூ.5.6 கோடி மதிப்பிலும் அமைப்பதற்கான பணிகளில் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது

மேலும் புதிய பேருந்து நிலையத்தில் பல்நோக்கு இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் பகுதி-1 ரூ.13.73 கோடி மதிப்பிலும், பகுதி-2 ரூ.9.41 கோடி மதிப்பிலும் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்நோக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் ரூ.11.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள், சாலை வசதிகள், கழிப்பிட வசதிகள், வழிகாட்டு அறிவிப்பு வசதிகள் என, ரூ.38.97 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.14.68 கோடி மதிப்பில் நயினார்குளம் கரைப்பகுதிகளை மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நயினார் குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்பு சுவர் அமைத்தும் நடுவில் அழகிய நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குநர் வி. நாராயணன் நாயர், செயற் பொறியாளர் எல்.கே. பாஸ்கர், உதவி செயற் பொறியாளர் சாந்தி, உதவி ஆணையர்கள் ஐயப்பன், சுகி பிரேமா உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x