Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்ட மக்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை தெரிவிக்க ‘வணக்கம் நெல்லை’ என்ற பெயரில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவ்வசதியை தொடங்கி வைத்த ஆட்சியர் வே.விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளைத் தெரிவிக்க, ‘வணக்கம் நெல்லை’ என்ற 9786566111 தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் எளிதாக வாட்ஸ்அப் மூலமாகவும், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் குறைகளை, புகார்களை தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றவுள்ளனர். இக்கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கப்படும் புகார்கள் துறை வாரியாக பிரித்து அனுப்பப்படுவதோடு, ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்தவர்களுக்கு உரிய முறையில் பதில்கள் வழங்கப்படும்.
புகார் தெரிவிப்போரின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட நிர்வாகம் ரகசியமாக வைத்திருக்கும். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்து மனுக்கள் அளிப்பதற்கு பதிலாக, தொலைபேசி எண்ணில் குறைகளைத் தெரிவித்து தீர்வுபெற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT