Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM

தென்னை மரங்களில் எலி, மரநாய் தாக்குதல் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை :

ஈரோடு

தென்னை மரங்களில் எலி மற்றும் மர நாய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் நம்பியூர் வேளாண் உதவி இயக்குநர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்னை மரங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான கோடை காலத்தில் எலிகளின் தாக்குதல் அதிகமாகவும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் எலிகளின் தாக்குதல் குறைவாகவும் இருக்கும்.

3 முதல் 6 மாத வயதுடைய குரும்பைகள் அல்லது இளநீர் காய்களில் 5 செ.மீ விட்டமுடைய துளைகள் தேங்காயும் காம்பும் சேரும் (தொக்கு) பகுதிக்கு அருகில் காணப்படும். எலிகள் ஓலைகள் மற்றும் விரியாத பாளைகளையும் கடித்து சேதப்படுத்தும்.

இவற்றைக் கட்டுப்படுத்த புரோமோடையலோன் 0.005 மருந்தினை மரத்திற்கு 10 கிராம் வீதம் மரத்தின் கொண்டைப்பகுதியில் 12 நாட்கள் இடைவெளியில் இருமுறை வைக்க வேண்டும். 95 பங்கு பச்சரிசி, 3 பங்கு தேங்காய் எண்ணெய் மற்றும் 2 பங்கு ஜிங்க் பாஸ்பாசை (எலி மருந்து) கலந்த விஷ மருந்தை எலி இருக்கும் குழியினுள் போட வேண்டும்.

தரைப்பகுதியிலிருந்து 2 மீ உயரம் வரை கால்வனைசிங்க் செய்யப்பட்ட இரும்பு அல்லது கருவேல் மர முட்களை மரத்தில் பொருத்தி வைக்கலாம். எலிப்பொறிகளில் மசால்வடை, கடலைக்கொட்டை, தேங்காய் கீற்று ஆகியவற்றை வைத்து எலிகளைப் பிடித்து அழிக்கலாம்.

தென்னை மரத்தைச் சுற்றி பாலித்தீன் பேப்பரை கட்டி எலிகள் மரங்களின் மீது ஏறாமல் தடுக்கலாம். உபயோகப்படுத்தப்பட்ட உரச்சாக்குகளை மரத்தின் கொண்டைப்பகுதியில் கட்டி எலிகளைப் பயமுறுத்துவதன் மூலம் அவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம்.

மரநாய் தாக்குதல்

மரநாய்கள் இளங்கன்றுகள் மற்றும் குரும்பைகளை அதிகளவில் தாக்கும். தாக்கப்பட்ட மரத்தின் கீழ் துளை உடைய குரும்பைகள் விழுந்து இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த பழுத்த வாழைப் பழத்தினுள் சிறிய துளையிட்டு அதனுள் அரை கிராம் கார்போபியூரான் குருணைகளை வைத்து தோப்பில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் மரநாய்களைக் கட்டுப்படுத்தலாம்.

அதேநேரத்தில், வெளியாட்கள் மற்றும் மாடு போன்ற பிராணிகள் மருந்து வைக்கப்பட்ட பழத்தினை உண்ணாதவாறு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x