Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

தேர்தலை மனதில் கொண்டு அவசரமாக தொடங்கியதால் - நின்றுபோன ராமநதி- ஜம்புநதி இணைப்பு திட்டப்பணி : வனத்துறை அனுமதி பெறவில்லை என, எம்எல்ஏ குற்றச்சாட்டு

தென்காசி

தேர்தலை மனதில் கொண்டு அவசரமாக தொடங்கியதால் ராமநதி- ஜம்புநதி இணைப்பு திட்டப்பணி நின்றுபோனதாக தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சு.பழனி குற்றம்சாட்டியுள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ராமநதி- ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. கடந்த 2020-ல் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை மனதில் கொண்டு அவசரம் அவசரமாக அப்போதைய அதிமுக எம்எல்ஏவால் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் நடைபெறுவதற்கு வனத்துறையின் அனுமதி பெறவில்லை. இத்திட்டத்துக்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு நில இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. அதனால், ஆரம்பிக்கப்பட்ட பணி நிறுத்தப்பட்டது. வனத்துறை அனுமதி பெற்று, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு

ராமநதி- ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு நிலம் கையகப் படுத்த தனிநபர் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு ஆட்சியர் தலைவராக இருப்பார். மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர், கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர், வனத்துறை அதிகாரி, மாவட்ட பதிவாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

விரைவில் இந்த குழு கூடி கலந்தாலோசித்த பின்னர் நிலம் வழங்கும் உரிமையாளர்கள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, கையகப்படுத்தப்படும் நிலத்தின் அளவு, இழப்பீடு பெற தேவைப்படும் ஆவணங்கள், தனிநபர் பேச்சுவார்த்தை தொடங்கும் நாள் ஆகியவை முடிவு செய்யப்பட்டு, நிலம் எடுப்பு பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x