Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM
குறுவை தொகுப்பு திட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 1,989 டன் யூரியா வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குறுவை சாகுபடி மேற் கொள்ளவும், டெல்டா விவசாயிகளின் நெல் உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்கிடும் வகையிலும் குறுவை தொகுப்புத் திட்டமானது ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இந்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு ஏக்கருக்கு 90 கிலோ யூரியா ரூபவ், 50 கிலோ டிஏபி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை ரூ.2,185-க்கும், பசுந்தாள் உர விதை 20 கிலோ ரூ.1,400-க்கும் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. நெல் விதையானது 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இத்தொகுப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 1,989 டன் யூரியா, 1,105 டன் டிஏபி, 552.5 டன் பொட்டாஷ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பசுந்தாள் உரப்பயிர் விதையானது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 2 ஏக்கருக்கு தேவையான உரம் மற்றும் பசுந்தாள் உரப்பயிர் விதையினை 100 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம்.
இத்தொகுப்பு திட்டத்தில் பயனடைய விரும்பும் டெல்டா வட்டார விவசாயிகள் தங்கள் கிராமத்தின் உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தாங்கள் பயிர் செய்துள்ள நிலத்திற்கான பட்டா (அல்லது) சிட்டா அடங்கல் சான்றிதழ் மற்றும் ஆதார் அல்லது உழவர் அடையாள அட்டை (அல்லது) உழவர் கடன் அட்டையை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்து பயனடையலாம்.
மேலும், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக நெல் நடவு இயந்திரம், நெல் களையெடுக்கும் இயந்திரம், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவைகள் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் இயந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலி மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்து இயந்திரங்களுக்கும் மானியத்தை பெற்று பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT