Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

சேலம் அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் : வனத்துறை அமைச்சகத்தில் பொதுமக்கள் புகார்

சேலம்

ஓமலூர் அருகே சந்தனமரங்களை மர்ம கும்பல் வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறை அமைச்சகத்துக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

சேலம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்டுக்கல் மலைக் கிராமத்தில் உள்ள ஒலக்கூர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பதினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காய்கறிகள், வாழை மற்றும் மலைப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்குள்ள சில விவசாயிகளின் நிலங்களில் இயற்கையாக அதிகளவில் சந்தன மரங்கள் வளர்ந்து வருகிறது. சுமார் 10 முதல் 20 ஆண்டுகள் வரை வளர்ந்துள்ள சந்தன மரங்களை மர்ம கும்பல் அடிக்கடி வெட்டிக் கடத்தி வருகின்றனர்.

வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 4 சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டிக் கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பாக சவுந்தரராஜன், டேனீஸ்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், தனியார் நிலம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை.அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக வனத்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். மனுவில்,‘சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதை தடுக்கவும், மரங்களை வெட்டிக் கடத்திய கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x