Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM
சேலம் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள 50 படுக்கைகளை கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கீடு செய்ய பரிசீலனை செய்து வருவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆட்சியரிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியர் கார்மேகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்துக்கு கரோனா தடுப்பூசிகள் ஒவ்வொரு முறையும் தலா 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டோஸ்கள் வருகின்றன. அதேபோல, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தடுப்பூசி மையத்துக்கும் தலா 100 முதல் 300 டோஸ்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடுகளுக்கு சென்று, தடுப்பூசி போடப்படுகிறது. முதியோர்கள் தடுப்பூசி தொடர்பான சந்தேகம் எழுப்பினால், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு சில அடிப்படை குறியீடுகளின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை அளிக்கிறது. சேலம் மாவட்டத்தில் தொற்றுப் பரவல் பாதிப்பு 6 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் அடுத்த வாரத்தில் நல்ல செய்தி வரலாம். இந்நிலையிலும் களப்பணியை தீவிரப்படுத்தி 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் வீதம் கண்காணிப்பு தொடர்கிறது. மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவது, தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை எப்போதும் பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளை தேவையின்றி வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. கரோனா முதல் அலை, 2-வது அலையில் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. இந்நிலையில், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்.
குறிப்பாக சேலம் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள 50 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளன. இப்படுக்கைகளை குழந்தைகளுக்கென ஒதுக்கீடு செய்யலாம் என சிந்தித்து வருகிறோம். ஏனென்றால், குழந்தைகளுக்கு அட்டென்டர் உடனிருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் 60 சதவீதம் காலியாக உள்ளன. சேலம் அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளும், இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தின் முதல்பிரிவில் 150 படுக்கைகள், 2-வது பிரிவில் 450 படுக்கைகளும் காலியாக உள்ளன. கிராமங்களில் சட்டை அணியாமல் இருப்பவர் கூட முகக் கவசம் அணிந்திருக்கின்றனர். இந்த விழிப்புணர்வு மக்களிடம் தொடர வேண்டும். கரோனா 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT