Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் :

சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வனக்குழுவினர்.

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட10 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி நேற்று தொடங்கியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி, சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், தலமலை என 10 வனச்சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த காப்பகத்தில் வசிக்கும் புலி, மான், யானை, சிறுத்தை, செந்நாய், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

வனவிலங்குகளின் கால்தடங் கள், எச்சம், நீர்நிலைகள், மரங்களில் உள்ள நகக்குறிகள் ஆகியவற்றை கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 6 பேர் வீதம் மொத்தம் 400 பேர் இப்பணியில் ஈடுபடவுள்ளனர்.

கணக்கெடுப்புப் பணியில் மூன்று நாட்கள் நேர்கோட்டுப் பாதையிலும், மூன்று நாட்கள் பகுதிவாரி பாதையிலும் ஈடுபடுவார்கள்.

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நவீன ஜி.பி.எஸ். கருவி, திசைகாட்டும் கருவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு மூன்று நாட்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் குறித்தும், அடுத்த மூன்று நாட்கள் மற்ற விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பும் நடைபெறும். அதன்படி நேற்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

6 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தியபின்னர், அது தொடர்பான அறிக்கை தமிழ்நாடு தலைமை வனக்காப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x