Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில், பாதுகாப்பு கவச உடை அணிந்து ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள எச்.கிருஷ்ணன் உண்ணி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த ஆட்சியர், அவர்களுக்கான சிகிச்சை முறை, உணவு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சளி மாதிரிகள் பரிசோதனை செய்யும் ஆய்வகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடப்பணிகளையும் மற்றும் மருத்துவ பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் கலன்களையும் பார்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பாதுகாப்பு கவச உடை அணிந்த ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, மருத்துவர் குழுவுடன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களைச் சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான பொருட்களை, அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நேரடியாக கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT