Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
ஈரோட்டில் 18 ஆயிரம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மருந்துகள் பற்றாக்குறையால் கடந்த வாரம் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. இந்நிலையில், தடுப்பூசி மருந்து வரப்பெற்ற நிலையில், கடந்த மூன்று நாட்களாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 76 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 100 முதல் 200 தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போடும் மையங் களுக்கு அதிகாலையிலேயே வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பவானி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டோக்கன் முறையில் தடுப்பூசி போடாமல், தன்னார்வலர்கள் கூறும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தலையீட்டின் பேரில் அமைதி ஏற்பட்டது.
மாவட்டத்தில் 13-ம் தேதி வரை 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவில் 59 ஆயிரத்து 509 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 89 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன் தின நிலவரப்படி, பெருந்துறை அரசு மருத்துவமனையில் 500, மாநகராட்சியில் 2500, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13 ஆயிரத்து 100, கிடங்கில் 2090 என மொத்தம் 18 ஆயிரத்து 190 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
இந்நிலையில் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், ‘போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் வெவ்வேறு இடங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT