Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

காவிரி டெல்டா பாசனத்துக்காக - மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சேலம் / ஈரோடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். எனினும், அணையின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதில் மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில், நடப்பாண்டு உரிய காலத்தில் (ஜூன் 12-ம் தேதி) மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.

அதன்படி இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். மேட்டூர் அணை வரலாற்றில் காவிரி டெல்டா பாசனத்துக்காக 88-வது ஆண்டாக இன்று நீர் திறக்கப்படுகிறது. எனினும், இதுவரை 17 ஆண்டுகள் மட்டுமே, உரிய காலமான ஜூன் 12-ம் தேதியன்று பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி, அப்போதைய முதல்வர் பழனிசாமி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 96.80 அடியாகவும், நீர் இருப்பு 60.77 டிஎம்சி-யாகவும் இருந்தது. நீர் வரத்து விநாடிக்கு 1,181 கனஅடியாகவும், குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு விநாடிக்கு 750 கனஅடியாகவும் இருந்தது.

7 கதவணைகளில் மின் உற்பத்தி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, ஈரோடு மாவட்டம் பாசூர் வரை, காவிரி ஆற்றில் ஏழு கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்படுவதையொட்டி, ஏழு தடுப்பணைகளிலும் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்தவுடன் மின்னுற்பத்தி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது,ஈரோட்டில் வெண்டி பாளையம் உள்ளிட்ட சில தடுப்பணை ஷட்டர்களில், ஆகாய தாமரை செடி நிறைந்து அடைத்து நிற்கிறது. அவை, மின்சார உற்பத்தி நிலைய ஷட்டர் வழியாக இறங்காத வகையில் வலை அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் அடித்து வரும் ஆகாயத்தாமரைகளால், நீரோட்டம் பாதிக்காதவாறும், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x