Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் 18,416 மனுக்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவு :

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஆட்சியர் கார்மேகம் பேசினார். உடன் மாவட்ட வன அலுவலர் முருகன்.

சேலம்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மக்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக வரப்பெற்ற 18,416 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல், தெருக்களிலும் சாலைகளிலும் தேவையின்றி நடமாடி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

மக்கள் மருந்தகங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மருந்துக் கடைக்கு செல்லும் பொதுமக்கள் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்கின்றனவா என்பதனை மருந்துக் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் வரப்பெற்ற மனுக்கள் தொடர்பாக துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் துறை தொடர்பாக 1,987 மனுக்களும், வருவாய்த் துறை தொடர்பாக8,061 மனுக்களும், அரசின் தலைமைத்துறை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரப்பெற்ற 2,632 மனுக்களும், பிற துறைகளின் தொடர்பாக 5,736 மனுக்களும் என மொத்தம் 18,416 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.

இம்மனுக்கள் மீது துறை அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு தீர்வுகள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் முருகன், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x