Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சேலம் சாரதா பால மந்திர் பள்ளியில் நடந்தது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், உடல்வலி, உடல்சோர்வு, தலைவலி, சளி, இருமல், மூச்சுத் திணறல், சுவையின்மை உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியில் ஏற்கெனவே 700 களப்பணியாளர்கள் உள்ள நிலையில், கூடுதலாக பணியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 550 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பணியாளர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி வழங்க வேண்டும்.
களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனைகளை நடமாடும் வாகனம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்துக்குள் வீட்டிலேயே சென்று வகைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினர் அடங்கிய நடமாடும் வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் நோய் தன்மை குறித்து பரிசோதித்து வழிகாட்டும் பணிகளையும் ஒருங்கிணைத்து, தொற்றினால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொறுப்பு மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மண்டல அலுவலர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, தொற்று பாதிப்பில்லா நிலையை சேலத்தில் உருவாக்க சுகாதார அலுவலர்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையர்கள் ராம்மோகன், சரவணன், சண்முக வடிவேல், ரமேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT