Published : 03 Jun 2021 03:15 AM
Last Updated : 03 Jun 2021 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் : டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது

தமிழக அரசு அறிவித்த 14 வகையான ரேஷன் பொருட்கள் தொகுப்பை பெற, வேலூர் தோட்டப்பாளையம் புதுத்தெருவில் நேற்று வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்த நியாய விலைக்கடை ஊழியர். படம்: வி.எம்.மணிந்தன்.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை/தி.மலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு ரேஷன் கடை களில் 14 வகையான மளிகைப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் மளிகைப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் மாதம், 14 வகை யான மளிகைப்பொருட்கள் அடங் கிய தொகுப்பு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி (இன்று) சென்னையில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு குடும்ப அட்டையின் எண்ணிக் கைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதையொட்டி, கரோனா முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும், கரோனா விதிமுறைகளை பின்பற்றி ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களின் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கின.அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கின.

இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 698 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 871 குடும்ப அட்டைதாரர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 514 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து11 ஆயிரத்து 385 குடும்ப அட்டை தாரர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 027 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 10 லட்சத்து 63 ஆயிரத்து 283 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் உணவுப்பொருட் கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவிப்பின்படி 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணிகள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. இப்பணிகள் வரும் 4-ம் தேதி வரை பகுதி வாரியாக நடைபெறும்.

பொதுமக்களுக்கு வழங்கப் பட்டுள்ள டோக்கனில் மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தின்படி ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், 2-ம் தவணை கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வந்தவுடன் அந்த தொகையும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 7.60 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, தமிழக அரசின் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை மறுதினம் (5-ம் தேதி) முதல் ரேஷன் கடைகளில் வழங்கவுள்ளனர்.

தினசரி 200 பேர் வீதம் மளிகை தொகுப்பு வழங்க உள்ளதால் அவர்களுக்கான டோக்கன் விநியோகம் பணி நடைபெற்று வருகிறது. டோக்கனில் குறிப் பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என மாவட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x