Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

சேலம் மாவட்டத்தில் - கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் :

சேலம் சீரங்கபாளையம் சாரதா பால மந்திர் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தடுப்பூசி மையத்தில், ’இன்று தடுப்பூசி கிடையாது ' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால், தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் மாவட்டத்தில் பல தடுப்பூசி மையங்களில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், ‘தடுப்பூசி இல்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று தடுப்பூசி செலுத்த சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள வசதியாக சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் சுகாதார மாவட்டத்தில் உள்ள கரோனா தடுப்பூசி மையங்களில் நேற்று காலை 5,300-க்கும் குறைவான டோஸ் தடுப்பூசியும், ஆத்தூர் சுகாதார மாவட்ட தடுப்பூசி மையங்களில் சுமார் ஆயிரம் டோஸ் தடுப்பூசி மட்டுமே இருப்பு இருந்தது. இதனால், தடுப்பூசி மையங்களில் நேற்று மதியமே தடுப்பூசி இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு, அங்கு தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையத்துக்கு தடுப்பூசி போட வந்த பலர், அங்கு தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துவிட்டது. இதனால், தடுப்பூசி இருப்பு வேகமாக குறைந்துவிட்டது. ஒவ்வொரு மையத்திலும் குறைவான டோஸ்களே இருப்பு இருந்த நிலையில், அங்கு ஏராளமானோர் தடுப்பூசி போட வந்தபோது, இருப்பு விரைவில் தீர்ந்துவிட்டது.

அரசிடம் இருந்து விரைவில் தடுப்பூசிகள் வந்து விடும். வந்தவுடன் மீண்டும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x