Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு களப்பணியாளர் பணிக்கு வாய்ப்பு : சேலம் மாநகராட்சி ஆணையர் அழைப்பு

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு களப்பணியாளர்களாக பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் இப்பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் 700 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, 100 வீடுகளுக்கு ஒரு பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக 1,000 களப்பணியாளர்களை 3 மாதம் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணிக்கு, பொதுச்சேவையில் ஆர்வமுள்ள பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்த தன்னார்வலர்கள், தங்கள் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல உதவி ஆணையரை அணுகி இப்பணியில் ஈடுபடலாம்.

சூரமங்கலம் மண்டலத்தில் உள்ளவர்கள் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள ஜிவிஎன் திருமண மண்டபத்திலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ளவர்கள் கோட்டை பல்நோக்கு அரங்கிலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் உள்ளவர்கள் வைஸ்யா திருமண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ளவர்கள் திருச்சி புதிய கிளை ரோடு பகுதியில் உள்ள எஸ்என்எஸ் மண்டபத்துக்கும் இன்று (1-ம் தேதி) காலை 10 மணிக்கு கல்வி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் சென்று பணியில் ஈடுபடலாம். இப்பணிக்கு தினப்படியாக ரூ.319 வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் அறிய சுகாதார ஆய்வாளர்களை சூரமங்கலம் 98433 39205, அஸ்தம்பட்டி 75982 05707, அம்மாப்பேட்டை 98420 65732, கொண்டலாம்பட்டி 98428 90099 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x