Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM
கங்கைகொண்டானில் உள்ளதனியார் ஆலையில் விரைவில்ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 298 நியாய விலைக் கடைபணியாளர்கள் மற்றும் பெட்ரோல்விற்பனை நிலைய பணியாளர்களுக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் நேற்றுதொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி தொகுதி எம்பி ஞானதிரவியம், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நாளொன்றுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 9 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர்.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்தியதொழில் வர்த்தக துறை அமைச்சரை சந்தித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி மையத்தை தமிழக அரசே இயக்குவது தொடர்பாக கடிதம் அளிக்கப்பட்டது. 10 நாட்களுக்குள் பதில் அளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களது பதிலை தமிழக அரசு எதிர்நோக்கி காத்திருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாவது அலகில்ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பட்சத்தில் 24 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கிடைத்தால் தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் தேவை பூர்த்தியாகும்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 8 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் உள்ள கர்ப்பிணிகளுக்கான கரோனா பராமரிப்பு மையத்தை பார்வையிட்டார். அங்கு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், சிகிச்சைகள், பராமரிப்பு முறைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT