Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM

ஆம்பூர், ஆற்காடு பகுதிகளில் - தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைகளுக்கு அபராதம் :

ஆம்பூர் பஜார் பகுதியில் ‘சீல்’ வைக்கப்பட்ட இறைச்சி கடைகள். அடுத்த படம்: ஆம்பூரில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோழிகள்.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

ஆம்பூர் மற்றும் ஆற்காடு அருகே அனுமதியின்றி திறக்கப்பட்ட இறைச்சிக்கடைகளுக்கு வரு வாய்த் துறையினர் நேற்று ‘சீல்’ வைத்து அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் காய்கறி மற்றும் மளிகைக்கடைகளை தவிர மற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய அனுமதியில்லை.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு மறைமுகமாக விற்பனை நடைபெறுவதாக நகராட்சி மற்றும் வருவாய்த் துறை யினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில், திருப்பத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் பஜார் பகுதி, ஜின்னா ரோடு, மார்க்கெட் பகுதி, திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதிகாலை 3 மணியளவில் இறைச்சிக்கடைகளை திறந்து காலை 6 மணிக்குள்ளாக இறைச்சி விற்பனை முடிக்கப்பட்டு கடை மூடப்பட்டிருப்பது தெரியவந்தது.இது குறித்து விவரங்களை சேகரித்த நகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி கடைகளை திறந்த வர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர்.

அதேபோல, ஆம்பூர் நகரம் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் நகர காவல் ஆய்வாளர் திருமால் தலைமையிலான அதிகாரிகள் ஆம்பூர் பஜார் பகுதி, உமர்ரோடு, நேதாஜி ரோடு, கஸ்பா மற்றும் மோட்டுக்கொள்ளை பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், பஜார் மற்றும் மோட்டுக்கொள்ளை பகுதியில் அனுமதியின்றி இறைச்சிக்கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்துக் கொண்டிருந்த 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதன் பிறகு அங்கிருந்து 60 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் தொரப்பாடி, காட்பாடி, காந்தி நகர் கிழக்கு, வேலப்பாடி, கஸ்பா, ஆர்.என்.பாளையம், சத்துவாச்சாரி, அலமேலுரங்காபுரம், சைதாப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தடையை மீறி மறைமுகமாக நேற்று இறைச்சி விற்பனை நடைபெற்றது. ஒரு சில பகுதிகளில் கடையை வெளிப்புறமாக மூடிவிட்டு பின்புறமாக இறைச்சி விற்பனை நடைபெற்றது. அதிகாரிகள் வருவதற்குள்ளாக வியாபாரத்தை முடித்த கடை உரிமையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி வருவாய் அலுவலர் வினோத் தலைமையிலான வருவாய்த் துறையினர் பஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு அனுமதியின்றி திறக்கப்பட்ட இறைச்சிக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர் மற்றும் வாலாஜா போன்ற பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் இறைச்சி விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கடை உரிமை யாளர்கள் அவசர, அவசரமாக கடைகளை மூடிவிட்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x