Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

தொற்று பரவலை முதல் நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை - வீடு வீடாகச் சென்று பரிசோதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் : அலுவலர்களுக்கு சேலம் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சேலம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவலை முதல் நிலையிலேயே கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் வீடு, வீடாகச் சென்று தொற்று அறிகுறி பரிசோதனை பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம் மண்டலத்தில் 890 நபர்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 889 நபர்களும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 671 நபர்களும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 481 நபர்களும் என மொத்தம் 2,934 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாநகராட்சியின் 3,401 தெருக்களில் 1,676 தெருக்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். 3 நபர்களுக்கு மேல் ஒரே பகுதியில் பாதிக்கப்பட்ட 99 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொற்று அதிகமாக உள்ள சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலங்களில் தொற்று பரவலை முதல் நிலையிலேயே கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் உடன் இருப்போரை தனிமைப் படுத்தி கண்காணித்தல் மூலம் நோய் தொற்று பரவலை முற்றிலும் தடுக்க வேண்டும். எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் தொற்று அறிகுறி பரிசோதனை பணியினை தீவிரப் படுத்தி அனைத்து தெருக்களிலும் விரைந்து பணியினை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x