Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM
திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வெங்காய மண்டி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று (மே 28) திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் மே 24-ம் தேதி முதல் மூடப்பட்டது. மீண்டும் மே 29-ம் தேதி(நாளை) திறக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று (மே 28) வெங்காய மண்டி திறக்கப்படவுள்ளதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜ், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
வெங்காய மண்டி மூடப்படுவது தொடர்பாக விவசாயிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும், விவசாயிகள் பலர் ஏற்கெனவே வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டனர்.
தற்போது, அறுவடை செய்த வெங்காயத்தைப் பாதுகாக்க முடியாமல் அவதிப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக வெங்காயம் அழுகி வருவதாகவும் விவசாயிகள் கூறி வந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மே 28-ம் தேதி(இன்று) இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை வெங்காய மண்டியில் விற்பனை நடைபெறும். மே 29-ல் விற்பனை இருக்காது.
அதைத்தொடர்ந்து, மே 30-ம் தேதி முதல் வெங்காய மண்டி தினமும் செயல்படும். மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே வெங்காயம் விற்பனை செய்யப்படும். மண்டி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்திருக்கவும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT