Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM

முதியோர், ஆதரவற்றோருக்கு வீடு தேடிச்சென்று உதவும் காவல்துறை :

திருநெல்வேலி அருகே பாறையடியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஷ்குமார் ஆகியோர், முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பொருட்களை வழங்கினர். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

`வேர்களைத் தேடி’ திட்டத்தின்மூலம் கரோனா காலத்தில் வீடுதேடிச் சென்று முதியோர், ஆதவற்றோருக்கு காவல்துறையினர் உதவிகளை செய்து வருகிறார்கள்.

திருநெல்வேலியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஷ்குமார் ஆகியோர் இத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தனர். முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர், சோப்பு, கபசுர குடிநீர் பொடி, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

அவர்கள் கூறும்போது உதவி தேவைப்படும் முதியவர்கள், ஆதரவற்றவர்கள், மாநகர கட்டுப்பாட்டு அறையை 94981 81200, 0462 2562651 ஆகிய எண்களில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இதற்காக சிறப்பு ரோந்து வாகனங்களில் சென்று உதவ தனியாக போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகரில் 23 இடங்களில் போலீஸார் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்துகின்றனர். மாநகரில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியதாக 220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி

கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்று உதவுவதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுவோர் இந்த தனிப்பிரிவு காவல் துறையினரை 9514144100 என்ற செல்போன் எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மனைவி ஜெயராணி என்பவர் தனது வீட்டருகில் 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வறுமையில் கஷ்டப் படுவதாகவும், அவர்களுக்கு சமைத்து சாப்பிடுவதற்கு அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்றும் நேற்று தகவல் தெரிவித்தார். இதுபோல் பலரும் தனிப்பிரிவை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

இதையடுத்து உதவி கோரிய 50 பேருக்கு 1 மணி நேரத்துக்குள் அரிசி, எண்ணெய், பருப்பு, வத்தல் பொடி, புளி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை எஸ்பி வழங்கினார்.

குடும்பத்துக்கு நிதி

விளாத்திகுளம் அருகே மேலக் கல்லூரணியை சேர்ந்த ராஜேஷ் மனைவி முத்துலட்சுமி (29). இவர் 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த விளாத்திகுளம் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு டிச.30-ம் தேதி பிரசவத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவர் உட்பட தமிழகத்தில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 5 பேர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு 2013-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் ரூ.37.18 லட்சம் நிதி சேர்த்தனர். இதனை 5 குடும்பங்களுக்கும் பிரித்து வழங்கினர். முத்துலட்சுமியின் குடும்பத்தினரிடம் ரூ.7.50 லட்சம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x