Published : 27 May 2021 03:12 AM
Last Updated : 27 May 2021 03:12 AM
மத்திய அரசைக் கண்டித்து மத்திய மண்டலங்களில் உள்ள மாவட் டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று கம்யூனிஸ்ட்கள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் 6 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து, மத்திய பாஜக அரசு பதவியேற்ற மே 26-ம் தேதியை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைபிடிப்பது என அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அழைப்பு விடுத்தது.
இதையேற்று, திருச்சியில் கரூர் புறவழிச்சாலையில் அண்ணாமலை நகரில் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கருப்புக் கொடியேந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.
இதேபோல, சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்டத்தில் 32 இடங்களிலும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் 70 இடங்களிலும் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநகரில் 50 இடங்களில் கருப்புக் கொடியேற்றப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பிலும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. அதேபோல, திருமானூரை அடுத்த வெங்கனூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்களது கால்நடைகளின் கொம்புகளில் கருப்புத் துணிகளைக் கட்டி மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.
கரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 34 இடங்களிலும், தோகைமலை பகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரின் 1,000-க்கும் மேற்பட்ட வீடு, அலுவலகங்களில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மமக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் அவரவர் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் சார்பில் பல இடங்களில் நேற்று கருப்புக் கொடிகளை வீடுகளில் கட்டியும், கைகளில் ஏந்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT