Published : 26 May 2021 03:15 AM
Last Updated : 26 May 2021 03:15 AM

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு - தி.மலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள் : அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட வியாபாரிகள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங் கப்படும் என அறிவிக்கப் பட்டதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

கரோனா தொற்று பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, பொது மக்களின் வசிப்பிடத்துக்கு சென்று தள்ளுவண்டிகள், சரக்கு வாகனங்கள் மூலமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருவண்ணா மலை நகராட்சி அலுவலகம் மூலமாக அனுமதிச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய 385 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களில், 213 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமேஅனுமதிச் சீட்டு வழங்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அச்சம் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “ஏற்கெனவே அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான முடிவு எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் எங்களில் பலருக்கு அச்சம் உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு வியாபாரி மயக்கம்போட்டு விழுந்துள்ளார்” என்றனர்.

அவர்களிடம், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை (இன்று) நடைபெறவுள்ளது.

அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே அனுமதிச் சீட்டு பெற்ற வியாபாரிகளை வரவழைத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர். இதையடுத்து, அனை வரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x